சிதம்பரம் அருகே உசுப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜேந்திரா கார்டன் எதிரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இது கட்டி முடிக்கப்பட்டு பல வருடங்களாக பராமரிப்பு இன்றி இருந்தது. தற்போது அந்த தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பி வினியோகம் செய்ய தொடங்கி உள்ளனர். ஆனால் அந்த தண்ணீர் தொட்டியின் தூண்கள் முற்றிலும் சேதம் அடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். ஆகவே ஆபத்தான நிலையில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.