திருப்பூர் மாநகர் நடுவே நொய்யல் ஆறு செல்கிறது. நகரின் நடுவே ஆறு செல்வது நகருக்கு கிடைத்த வரப்பிரசாதம். ஆனால் அந்த ஆற்றை பயன்படுத்தும் விதம்தான் கவலை அளிக்கிறது. நொய்யல் ஆற்றை சீரமைக்க அரசு அதிகம் செலவு செய்கிறது. ஆனாலும் அவற்றில் கலக்கும் கழிவுநீர், சாயக்கழிவுநீர், அசுத்தமான குப்பை, வீடுகளின் கழிவுகள், ஆலைகளின் கழிவுகள் என தினம் தினம் கலந்து ஆற்றின் நிறமே மாறி விட்டது. ஒரு காலத்தில் நொய்யல் ஆற்றில் மீன் பிடித்து சமைத்து உண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்று ஆற்றில் கால் வைக்கவே அச்சப்படுகிறார்கள். அந்த அளவுக்கு நொய்யல் ஆறு சுமக்க முடியாமல் அசுத்தத்தை சுமந்து செல்கிறது. எனவே அரசு நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் இருந்தாலும், மக்களும் நொய்யல் ஆற்றை குப்பை தொட்டிபோல் பயன்படுத்தாமல் இருக்க முன்வர வேண்டும்.