புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி நகரில் அரசு மருத்துவமனை, ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், போலீஸ் நிலையம், விவசாய அலுவலகம், மின்சாரவாரியம், மேல்நிலைபள்ளிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இதனால் மணல்மேல்குடி நகருக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்துசெல்கின்றனர். தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை பரபரப்பாக இருக்கும் இடமான தண்டலை நான்குரோடு, பெண்கள் பள்ளி சந்தை பேட்டை ஆகிய இடங்களில் சாலையில் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்துவதாலும், இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவதாலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு, வியாபாரிகளுக்கும் மிகவும் சிரமமான சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து போக்குவரத்துத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.