திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களில் போக்குவரத்து செறிவு அதிகம் கொண்டது துறையூர் தாலுகா ஆகும். துறையூர் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து தமிழகத்தின் அனைத்து முக்கியமான பகுதிகளுக்கும் புறநகர் பஸ் சேவை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் துறை பஸ்கள் மூலமும் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊட்டி, கோத்தகிரி போன்ற இடங்களுக்கு திருச்சியை அடுத்து துறையூரில் இருந்து மட்டுமே நேரடி பஸ் சேவை உள்ளது. பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஆகிய 2 இடங்களில் திருச்சி மண்டலத்தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் 2 பணிமனைகள் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 67 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய துறையூர் நகரில் இருந்து முருகனின் அறுபடை வீடான திருச்செந்தூர் செல்வதற்கு நேரடி பஸ் சேவை இன்று வரை இல்லை. துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் துறையூரில் இருந்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம், திருச்சி மத்திய பஸ் நிலையம், மதுரை, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு சென்று பின் திருச்செந்தூர் செல்ல வேண்டி உள்ளது. குறைந்தபட்சம் 4 பஸ்கள் ஏறி இறங்க வேண்டி உள்ளது. இதனால் வயதானவர்கள், பெண்கள் ஆகியோர் துறையூரிலிருந்து திருச்செந்தூர் செல்வதற்கு அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே தினமும் இரவு 9.30 மணிக்கு துறையூரில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி போக்குவரத்து, புறநகர் பஸ் சேவையை அரசு போக்குவரத்துக்கழகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.