மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிய நிழற்குடை

Update: 2022-11-23 11:55 GMT
ஈரோடு- கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புன்னம்சத்திரம் அருகே சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் நலன் கருதி பஸ்களுக்கு சென்று வருவதற்காக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த பயணிகள் நிழற்குடையில் பயணிகள் மழை, வெயில் காலங்களில் அமர்ந்து சென்று வந்தனர். குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு முன்பு எந்த பஸ்களும் அந்த இடத்தில் நிற்காமல் சென்று வருவதால் பயணிகள் அங்கு சென்று நிழற்கூடத்தில் அமர்ந்து பஸ்சில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு யாரும் செல்வதில்லை. இதன் காரணமாக பயணிகள் அமரும் வகையில் போடப்பட்டிருந்த காங்கிரீட் சிலாப்களை சில சமூக விரோதிகள் எடுத்துச் சென்று விட்டனர். மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் நிழற்குடையில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த மதுபாட்டிலில் உள்ள மதுவை அருந்திவிட்டு உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு அங்கேயே போட்டு பாட்டிலை உடைத்து செல்கின்றனர். இதனால் இந்த நிழற்குடை மது பிரியர்களின் கூடாரமாக மாறிவிட்டது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்