தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு,உளூர், பட்டுக்கோட்டை பைபாஸ் பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் தஞ்சை விளார் பைபாஸ் பகுதிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் மேற்கண்ட பகுதியில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் நேராக தஞ்சை பழைய பஸ் நிலையத்துக்கு செல்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து விளார் பைபாஸ் பகுதிக்கு வேறொரு பஸ்சில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்வதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. மேலும், பழைய பஸ் நிலையத்தில் இருந்து மேற்கண்ட பகுதிக்கு செல்லும் பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகளவில் காணப்படுகிறது. இதன்காரணமாக மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் இருந்து நேரடியாக விளார் பைபாஸ் பகுதிக்கு பஸ் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?