திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆவூர் காந்திநகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களின் வசதிக்காக கால்நடை ஆஸ்பத்திரி, அங்கன்வாடி மையம், மகளிர் சுய உதவி குழு கட்டிடம், சுகாதார வளாகம் மற்றும் திடக் கழிவு மேலாண்மை கொட்டகை அமைக்கப்பட்டது. இந்த பகுதிகளுக்கு செல்லும் சாலை குறுகிய அளவில் உள்ளது. மேலும் மண்பாதையாக உள்ளதால், மழைகாலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு செல்கின்றனர். அவ்வபோது நிலைதடுமாறி சேறும், சகதியில் விழுந்து விடுகின்றனர். வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்ளும் அவலம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண் பாதையை புதிய தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.