அரியலூர் மாவட்டம், வி.கைக்காட்டிற்கு தெற்கே பெரிய திருக்கோணம் செல்லும் முதன்மை சாலையில் அமைந்துள்ளது மு.புத்தூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்திலிருந்து தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி அதிகபாரத்துடன் படுதா போடாமல் அசுர வேகத்தில் மங்கட்டான் மற்றும் சேலத்தர் காடு கிராமங்கள் வழியாக அரியலூருக்கு சுண்ணாம்பு கற்களை ஏற்றி செல்கின்றனர். லாரிகள் வேகமாக செல்வதினால் சுண்ணாம்பு கற்கள் சாலையில் சிதறி விழுந்து சாலையின் இரு புறமும் வெள்ளை நிற பட்டைகளை மறைத்து மேடாக உள்ளது. மேலும் லாரிகள் எதிரே வரும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் வழி விட ஒதுங்கி நிற்கும்போது மிகவும் சிரமப்படுகின்றனர். வெயில் காலங்களில் மேற்படி மண்கள் காற்றில் பறப்பதாலும், புழுதி மண்டலமாக இருப்பதாலும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து விடுகிறது. மழைக்காலங்களில் சுண்ணாம்புக்கல் மண்கள் வழுக்கி விடுவதால் பல்வேறு விபத்துகள் நிகழ்ந்துள்ளது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் இருபுறமும் அதிகளவில் கருவேல முட்கள் அடர்ந்து வளர்ந்து சாலையில் தேங்கியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிவக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.