திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் வணிக வளாகங்கள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இயங்கி வருகின்றன. மேலும் ஏராளமான கல்வி நிலையங்களும் உள்ளன. தற்போது திருவாரூர் நகர பகுதியில் வாகனஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுகின்றனர். உரிய பாதுகாப்பின்றி கனரக வாகனங்களில் கட்டுமான பொருட்கள் உள்பட அதிக பாரங்களை ஏற்றி செல்கின்றனர். அதில் ஏற்றி செல்லும் கம்பிகள் வாகனங்களில் வெளியே தெரியும் வகையில் உள்ளது. இதனால் அந்த கம்பிகள் சாலையில் விழுந்து விடுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.