கூத்தாநல்லூர் அருகே வடகட்டளை மாரியம்மன் கோவில் எதிரே பாலத்தின் அருகில் ஓகைப்பேரையூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை மையமாக கொண்டு திருவாரூர் சாலை, வடபாதிமங்கலம் சாலை, வடகட்டளை கோம்பூர் சாலை, ஓகைப்பேரையூர் சாலை என நான்கு பிரிவு சாலை உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் பல்வேறு பணிகளுக்காக மேற்கண்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் இந்த பஸ் நிறுத்தத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு மக்கள் நடமாட்டம் அதிக அளவு காணப்படும் இந்த நான்கு பிரிவு சாலையில் மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடகட்டளை மாரியம்மன் கோவில் எதிரில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.