கரூர் மாவட்டம், புன்னம் சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள புகழூர் வழியாக ரெயில்வே பாதை செல்கிறது. இந்த ரெயில்வே பாதை வழியாக பயணிகள் ரெயில், சரக்கு ரெயில் போன்றவை அடிக்கடி சென்று வருகின்றன. இதன் காரணமாக ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் இருசக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு புகழூர் ரெயில்வே கேட் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மண்பாதை போடப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் ரெயில்வே கேட் பூட்டியதும் அங்குள்ள ரெயில்வே குகை பாதை வழியாக சென்று வந்தனர். இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக மண் சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக ஆகிவிட்டது. இதன் காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்ட முடியாமல் நிலை தடுமாறி செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.