அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து பழைய நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் வழியாக தினமும் எண்ணற்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் திருச்சி, தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் செல்கிறது. இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் குறிப்பாக மாவட்ட நூலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், கல்லங்குறிச்சி சாலையில் உள்ள செட்டேரிமேடு ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே போக்குவரத்திற்கு இடையூராக மாடுகள் கூட்டம் கூட்டமாக நிற்கிறது. சில மாடுகள் சாலையில் படுத்திருப்பது தெரியவில்லை. இதனால் இவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் விபத்துகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது. மேலும் இவ்வழியே தினமும் அடிக்கடி அரசு மருத்துவமனைக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ்கள் மாடுகளின் இடையூறால் நீண்ட நேரம் செல்ல முடியாமல் சாலையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் 108 ஆம்புலன்ஸ் உள்ளே விபத்தில் அடிபட்ட நபர்கள், வயதான நோயாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை நீண்ட காலமாக தீர்வு காண முடியாத நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.