கரூர் பசுபதிபாளையத்திலிருந்து வடக்கு காந்திகிராமம் செல்லும் சாலையில் தினந்தோறும் இரவு, பகல் என எல்லா நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் ராமானூரில் உள்ள தனியார் திரையரங்கம் அருகே ஒரு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.இந்த வேகத்தடை இருப்பது இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடை அருகே வரும் வரை தெரிவதில்லை. இதனால் வேகத்தை குறைக்காமல் அப்படியே வேகத்தடை மீது வாகனத்தை செலுத்தும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைகின்றனர். மேலும் கர்ப்பிணிகள்,வயது முதிர்ந்தோர், நோயாளிகள் ஆகியோரை பின்னால் அமர வைத்து இருசக்கர வாகனத்தில் வரும் போது வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கும்போது பின் இருக்கையில் இருந்து நழுவி கீழே விழுந்து பலத்த காயம் அடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த வேகத்தடையை அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் அல்லது வேகத்தடை மீது வெள்ளை வர்ணம் பூசி அறிவிப்பு பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
