அரியலூர் டவுனில் போக்குவரத்துக்கு இடையூறாக எப்போதும் அதிகளவில் மாடுகள் சுற்றி திரிகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தேரடி வரை மாடுகள் சாலையின் குறுக்கே அதிக அளவில் நிற்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சென்டர் மீடியன் பகுதிகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக படுத்துள்ளதால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். சில சமயங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகளை முட்டி விடுகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதோட அல்லாமல் இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடுவில் நிற்பதால் மருத்துவமனைக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ்கள் நீண்ட நேரம் நின்று விடுகிறது. இதனால் ஆம்புலன்ஸில் உள்ள கர்ப்பிணிகள் மற்றும் விபத்தில் அடிபட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் போய் விடுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.