அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி ரவுண்டானா பகுதியிலிருந்து (புறவழிச்சாலை) கயர்லாபாத் செல்லும் சாலை மிகவும் மோசமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது. அங்குள்ள மதுபான கூடம் அருகே சாலையின் இருபுறமும் சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களை நிறுத்தி வைப்பதால் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு அதில் மழைநீர் தேங்கி சாக்கடை குளமாக உள்ளது. சாலையில் உள்ள சுண்ணாம்புக்கல் மண்களை நெடுஞ்சாலை சார்பில் அகற்ற வில்லை. மண்கள் காற்றில் பறப்பதால் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கயர்லாபாத் கிராமத்தின் சாலை புழுதி மண்டலமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.