பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு போதுமான பயிற்சியும் விழிப்புணர்வும் இல்லாததால் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதாகவும், கடந்த 4 மாதங்களாக நடந்து வரும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் 4 முதல் 5 நபர்கள் மட்டுமே பங்கேற்பதால் பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சி, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களுக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள், குடிநீர், கழிப்பிட வசதி ஆகியவை குறித்து விவாதிக்க முடியாமல் பள்ளியின் வளர்ச்சி பின்தங்கியுள்ளதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் அனைத்துப் பள்ளிகளையும் கண்காணித்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு தேவையான பயிற்சியும் விழிப்புணர்வும் அளித்து, அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த முன்வர வேண்டும்.
-செல்வராஜ், பாணாவரம்.