கரூர் மாவட்டம் நொய்யல் அருகே புங்கோடை வழியாக புகளூர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் புங்கோடை, காளிபாளையம், குளத்துப்பாளையம் ,வேட்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது அழுக்குத் துணிகளை இங்கு கொண்டு வந்து துவைத்து காய வைக்கின்றனர். பிறகு புகளூர் வாய்க்கால் ஓரத்தில் இறங்கி குளித்து, பின்னர் துணிகளை எடுத்துச் செல்கின்றனர். அதேபோல் சலவைத் தொழிலாளர்கள் புங்கோடை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் அழுக்கு துணிகளை பெற்றுக்கொண்டு வந்து, இங்கு துவைத்து காயவைத்து கொண்டு செல்கின்றனர். ஆனால் புகளூர் வாய்க்காலுக்குள் இறங்குவதற்கு படிக்கட்டுகள் இல்லாததால் பொதுமக்களும், சலவை தொழிலாளர்களும் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் படிக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.