அரியலூர் மாவட்டம் முனியங்குறிச்சி கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் மு.புத்தூர் கிராமத்தில் இயங்கும் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்க நுழைவுவாயில் முதல் முனியங்குறிச்சி, பெரிய திருக்கோணம் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய தார்சாலை அமைத்தனர். இவ்வழியே செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதால் முனியங்குறிச்சி கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நுழைவுவாயில் அருகே பள்ளி மாணவர்கள் நலன் கருதி நெடுஞ்சாலை துறையினர் கடந்த ஆண்டு அறிவிப்பு பலகையை பெயரளவிற்கு சாலையில் வைத்துள்ளனர். தற்போது அந்தப் பலகை கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் கேட்பாரற்று கீழே விழுந்து கிடக்கிறது. வெளியூரிலிருந்து பள்ளியின் நுழைவுவாயில் வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வரும் நபர்களால் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக்கள் நிகழும் மோசமான சூழல் உருவாகியுள்ளது. மேலும் நெடுஞ்சாலை துறையினர் இங்கு வைத்துள்ள மற்ற அறிவிப்பு பலகைகள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் சூழலில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கீழே விழுந்து கிடக்கும் அறிவிப்பு பலகையை மீண்டும் அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.