கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா தலைமையிடமாக உள்ளது. அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள், அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சி உள்ளது. அரவக்குறிச்சியில் போலீஸ் நிலையம் உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கும், அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தை அணுகுகின்றனர். ஆனால் பெண்களுக்கு என்று தனியாக புகார் அளிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் கரூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை நாட வேண்டியுள்ளது. இதனால் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெண்களுக்கு நேர விரையம் ஆவதுடன் பண விரயமும் ஏற்படுகிறது. எனவே அரவக்குறிச்சி பகுதியில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.