திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாநல்லூர் நோக்கி செல்லும் சாலையில் கணக்கம்பாளையம் பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் வணிக வளாகம் முன்புறம் எரிவாயு குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சாலையோரம் ஆழமான குழி எடுக்கப்பட்டது. பின்னர் அதை நன்கு மூடாமல் அப்படியே திறந்த வெளியில் விட்டுள்ளனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் ரோடு முழுவதும் மண் கொட்டி கிடக்கிறது. இந்த இடத்தில் உள்ள வணிக கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் போக்குவரத்து இடையூறும், விபத்தும் ஏற்படுகின்றன. எனவே குழியை சரி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.