அரியலூர் நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக அரியலூர்-செந்துறை சாலை திகழ்கிறது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில், மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு கடைகள், மருத்துவக்கல்லூரி, கலைக்கல்லூரி, ரேஷன் கடைகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளதால் பலர் நடந்தும் சென்று வருகின்றனர். இதனால் இப்பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படும். இந்நிலையில், செந்துறை சாலையில் விளாங்கார தெரு சந்திப்பில் நகராட்சி கட்டுப்பாட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொது கழிவறை கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த கழிவறை போதுமான பராமரிப்பின்றி உள்ளது. மேலும் பலர் இதனுள் குப்பைகள் போட்டுவிட்டு செல்வதால் குப்பைக்கூழமாக காட்சியளிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருவதால் அந்த வழியாக செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த கழிவறையை சுத்தம் செய்து, மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.