புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா தலைமையிடமாகும். இங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 30 போலீசார் பணியிடங்கள் உள்ளன. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இன்ஸ்பெக்டர் மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பணியிடங்கள் பல மாதங்களாக நிரம்பப்படவில்லை. இதனால் போதிய போலீசார் இன்றி பாதுகாப்பு பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. கறம்பக்குடி பகுதியில் ஆர்ப்பாட்டம், மறியல் என போராட்டங்கள் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில் போலீசார் திணறி வருகின்றனர். போலீசார் பற்றாக்குறையால் குற்ற செயல்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே கறம்பக்குடி போலீஸ் நிலையத்துக்கு போதிய போலீசார் நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.