கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி சார்பில் சுமார் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் நொய்யல் அருகே குறுக்குச்சாலை பங்களா நகரில் ஊராட்சி சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த சேவை மையத்திலிருந்து விவசாயிகள், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு சான்றிதழ்களை பெற்று பயனடையும் வகையில் சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. இருப்பினும் இங்கு கட்டிடம் கட்டுப்பட்டு பல ஆண்டுகளாகியும் சேவை மையம் தனது சேவையை துவங்காமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதன் காரணமாக வேட்டமங்கலம் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், மாணவ- மாணவிகள் வேலாயுதம்பாளையம் மற்றும் பரமத்தி வேலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் சேவை மையங்களுக்கு சென்று தங்களுக்கு தேவைப்படும் சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். இதனால் தங்களது பகுதியில் சேவை மையம் இருந்தும் வெளியூர்களுக்கு சென்று சான்றிதழ்கள் பெற்று வரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.