நாகை புதிய பஸ் நிலையத்தை சுற்றிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கல்லூரிகள் உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் உள்ளன. இதனால் புதிய பஸ்நிலையம் எப்போதும் மக்கள் கூட்டத்தோடு காணப்படும். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள், மாணவ-மாணவிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இவ்வாறு முக்கியத்துவம் கொண்ட புதிய பஸ்நிலையத்தின் எதிரில் உள்ள மதுக்கடையில் இருந்து, மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கி வந்து, பஸ்நிலையத்தின் அருகில் அமர்ந்து மது அருந்துகின்றனர். சிலர் அதே இடத்திலேயே காலி மதுபாட்டில்களை போட்டு விட்டும், பாட்டில்களை உடைத்து விட்டும் செல்கின்றனர். இதனால் பயணிகள் அச்சத்துடனே பஸ்நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதே போல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி எதிரிலும் இதே நிலையே ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.