பொதுமக்கள் தங்கள் குறைகளை கூறுவதற்காக போலீஸ் நிலையம் வரும்போது அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும், வயதானவர்கள் மற்றும் பெண்களை அமர வைத்து விசாரிக்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் வரவேற்பாளர் என்று போர்டு வைத்து போலீஸ் நிலையம் வரும் பொதுமக்கள் அமர்ந்து முறையிடுவதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு போலீஸ் நிலையம் முன்பும் நீண்ட பெஞ்சு போடப்பட்டு உள்ளது. போலீஸ் நிலையத்திற்கு புகார் கூற வரும் வயதானவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் அமர்ந்து தங்கள் பிரச்சினைகள் குறித்து முறையிட்டு மனுக்கள் கொடுத்து செல்கின்றனர். இந்நிலையில் சமயபுரம் போலீஸ் நிலைய வரவேற்பாளர் மேஜை முன்பு போடப்பட்டிருந்த பெஞ்ச் சில நாட்களாக காணவில்லை. இதனால் வயதானவர்கள், கர்ப்பிணிகள், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் உள்ளிட்டோர் தங்கள் உடல் உபாதைகளுடன் நின்று கொண்டே போலீசாரிடம் நீண்ட நேரம் தங்களுடைய பிரச்சினைகள் குறித்து முறையிடுகின்றனர். இது அவர்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.