கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முனிநாதபுரத்தில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அந்தப்பகுதி பொது மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் முனியப்பசாமி கோவில் உள்ளது. மேலும் காவிரி ஆற்றின் ஓரத்தில் நெடுகிலும் விவசாய நிலங்களில் விவசாயிகள் பல்வேறு பண பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். விவசாய தோட்டங்களுக்கு செல்வதற்கும், முனியப்பசாமி கோவிலுக்கு செல்வதற்கும் முனிநாதபுரத்தில் புகழூர் வாய்க்காலின் குறுக்கே குறுகிய பாலம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதன் காரணமாக பாலத்தின் அடிப்பகுதி சிதிலமடைந்துள்ளது. மேலும் இந்த பாலத்தின் வழியாக இரு சக்கர வாகனம் மற்றும் நடந்து மட்டுமே செல்ல முடியும். இதனால் விவசாயிகள் இடுபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் விளைந்த பொருட்களையும் எடுத்து வர முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
