மணல் குவாரியை நிறுத்த கோரிக்கை

Update: 2022-10-26 12:42 GMT

வானம் பார்த்த பூமியான அரியலூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் வான் மழையையும், எப்போதாவது நிறைந்து வழிந்து வரும் ஆற்றுத் தண்ணீரையும் மட்டுமே நம்பியிருக்கிறார்கள். விவசாயப் பணிகளுக்கு மட்டுமல்ல, குடிக்கும் நீருக்கும்கூட இதுதான் நிலை. பல ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த ஆண்டு போதுமான மழை பொழிந்தது. இந்த ஆண்டு அது தொடருமா? எனத்தெரியவில்லை. இந்தநிலையில், வழிந்து வரும் ஆற்று நீரை கடைமடைப் பகுதிக்கு வந்துசேர விடாமல் ஆற்றுப்படுகைதோறும் மணல் கொள்ளை நடந்துவருகிறது. சவடு மண் என்ற பெயரில் விவசாய நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்பிடிப்புப் பகுதிகள், ஆற்றுப் படுகைகள் என எல்லா இடங்களிலும் மணல் எடுப்பதற்கு மாவட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கி வருகின்றனர். தீவுப் பகுதிகளில் மணல் எடுக்கக் கூடாது தீவுப் பகுதியிலும் சவுடு மண் எடுக்க அதிகாரிகள் முறைகேடாக அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் சிலுப்பனூர் கிராமத்தின் ஆற்றுப்பகுதியில் சவடு மண் என்ற பெயரில் நடைபெறும் மணல் குவாரிக்கு அந்தக் கிராம விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். சிலுப்பனூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கும் நிலையில், பெரும்பாலான குடும்பத்தினர் விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பியிருக்கிறார்கள். இதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆற்றுப்படுகைக்கு அருகே சவுடு மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு மணல் எடுக்கப்பட்டுவருகிறது. ஆனால், குவாரியில் மணல் எடுப்பவர்கள் மூன்றடி ஆழம் வரை மட்டுமே மணல் எடுக்க வேண்டும் என்ற விதிக்குப் புறம்பாக நிலத்தடி நீரே சுரக்கும் வரை சுமார் 18 அடி வரை குழிபறித்து மணல் அள்ளி வந்திருப்பதாகக் அப்பகுதி விவசாயிகள் கொதிக்கிறார்கள். கடந்த 2 மாதமாக 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் சவுடு மண் எடுக்கத் தொடங்கினர். திட்டக்குடி அருகே கொடிக்களம் மெயின் ரோட்டில் பழைய மணல் குவாரி இயங்கிய இடத்தில் மணல் லாரிகளை நிறுத்திக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்