கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆடு, கோழி, மீன் இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு சேகரமாகும் இறைச்சி கழிவுகளை இரவு நேரங்களில் சுங்ககேட் பகுதியில் இருந்து குளித்தலை - முசிறியை இணைக்கும் தந்தை பெரியார் காவிரி பாலத்தில் ஆரம்ப இடத்தில் பாலத்தின் மேல் இருந்து ஆற்றில் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் வரும்போது கழிவுகள் அடித்துச் செல்லப்பட்டு பல்வேறு பகுதிகளில் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கழிவுகளை அகற்றி, மேலும் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.