புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, வெட்டன்விடுதி அருகே கடுக்காகாடு, வாணக்கன் காடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு புதுக்கோட்டையில் இருந்து வெட்டன் விடுதி வழியாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழிலாளர்கள் பெண்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைந்து வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த அரசு டவுன் பஸ் வெட்டன்விடுதி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த அரசு டவுன் பஸ்சை வாணக்கன்காடு வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.