அரியலூர் மாவட்டத்தில் 9-க்கும் மேற்பட்ட சிமெண்டு ஆலைகள் இயங்கி வருகிறது. அரியலூர் பகுதியில் செல்லும் லாரிகள் அதிவேகமாக செல்வதினால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு கடந்த 2016-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட நிர்வாகம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும் கனரக வாகனங்கள் மற்றும் இதர கனரக வாகனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கபட்டுள்ள நிலையில் வி.கைகாட்டியில் முத்துவாஞ்சேரி சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்கள் மற்றும் ரெட்டிபாளையம் ஊராட்சியில் மு.புத்தூர் கிராமத்தில் செயல்படும் சுண்ணாம்பு கல் சுரங்கத்திற்கு செல்லும் டிப்பர் லாரிகள் நாகமங்கலம் மற்றும் முனியன் குறிச்சி சாலைகளில் அதிகளவில் வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு இடையூறாகவும், விபத்துகள் ஏற்படுத்தும் விதமாகவும் செல்கிறது. இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் ஒருவித பயத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.