பாதுகாப்பு இல்லாத பஸ் நிலையம்

Update: 2023-04-23 12:42 GMT

அரியலூர் தலைநகரில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு எவ்வித முன் அறிவிப்பும் அறிவிக்காமல் பழைய பஸ் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அரியலூர் புறவழி சாலையில் வாணி மகால் எதிர்புறம் கடந்த 21-ந் தேதி முதல் தற்காலிக பஸ் நிலையம் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் திடீர் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தற்காலிக பஸ் நிலையம் அமைந்துள்ள இடத்தில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு எவ்வித பந்தல்களும் அமைக்கப்படவில்லை. வெட்ட வெளியாக உள்ளது. போதிய உயர் மின்விளக்குகள் இல்லை. தற்காலிக பஸ் நிலையம் முழுவதும் புழுதி மண்டலமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாய நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் திருட்டு நடக்கும் சூழல் உள்ளது. திடீரென மழை பெய்தால் தற்காலிக பஸ் நிலையம் சேறும் சகதியாக மாற்றம் அடைந்தால் பஸ்கள் சிக்கிக் கொள்ளும். தற்போது கோடை காலம் என்பதால் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் பழைய பஸ் நிலையத்திலிருந்து தற்காலிக பஸ் நிலையத்திற்கு கடுமையான வெயிலில் நடந்தே செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்