திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவில் ஆண் மற்றும் பெண் பக்தர்கள் ஒவ்வொரு அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் மதுரை மாவட்டத்தில் தமிழக அரசு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள சதுரகிரி மலைக்கு சென்று வருகிறார்கள். பக்தர்கள் அனைவரும் திருச்சியிலிருந்து மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் சென்று பின் அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று தான் சென்று வருகிறார்கள். திருச்சியிலிருந்து சதுரகிரி செல்வதற்கு இன்று வரை சிறப்பு பஸ் வசதி ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக குழந்தைகள், கைக்குழந்தையுடன் கூடிய தாய்மார்கள் வயதானவர்கள் என அனைவரும் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சதுரகிரி மலை பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். நேரடி பஸ் சேவை வசதி இல்லாத காரணத்தால் பக்தர்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.