சேலம் சிவதாபுரம் அருகே சேலத்தாம்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கலப்பதைத் தடுக்கும் வகையில், சேலத்தாம்பட்டி பஞ்சாயத்து சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்திகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது அங்கு முறையான பராமரிப்பு இல்லாததால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் அசுத்தமான கழிவுநீர் எந்தவொரு சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக ஏரியில் கலக்கிறது. இதனால் ஏரி நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த சுத்திகரிப்பு தொட்டிகளை சீரமைக்கவும், கழிவுநீரை முறையாக சுத்திகரித்த பின்னரே ஏரியில் திறந்து விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.