திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியத்தில் உள்ள செம்பரை - திண்ணியம் இணைப்பு சாலையில் பிள்ளையார் கோவில் அருகே வாய்க்கால் உள்ளது. இதில் அமைந்துள்ள பாலம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு குழாயினால் கட்டப்பட்டது. தற்போது மிகவும் சிதிலமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. குழாய்க்குள் மண் அடைத்துள்ளதால் தண்ணீர் செல்ல முடியாமல் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. மேலும் பாலத்தின் இருபுறமும் பக்கவாட்டு சுவரும் இல்லாத நிலையில், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.