அரியலூர் மாவட்டம் முத்துசேர்வாமடம் ஊராட்சியில் முக்குளம் அருகே அளவேரி என்ற ஏரி உள்ளது. சலுப்பை, ஆலத்திப்பள்ளம் மற்றும் சத்திரம் ஆகிய கிராமங்களில் உள்ள வடிகால் மழைநீரானது இந்த அளவேரி ஏரிக்கு வந்து சேர்கிறது. மழைநீர் நிரம்பி காட்டுவாரி ஓடை வழியாக உபரி மழைநீர் சென்று பாண்டியன் ஏரியில் சேர்ந்து வடவாற்றில் கலக்கிறது. இந்த அளவேரி ஏரியின் வடிகால் மதகு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ள இந்த மதகால் மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.