திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக திகழ்வதால் இந்த அம்மனை தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் புனிதமான இடமாக கருதும் சமயபுரத்தில் நால்ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகிலேயே அதிகாலையிலேயே மது விற்பனை நடைபெறுவதால் அதை வாங்கி குடிப்பவர்கள் சாலையோரத்தில் உள்ள மரங்களுக்கு அருகில் குடித்துவிட்டு அலங்கோலமாக கிடப்பதும், அநாகரிகமாக பேசுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளே சிறிய பாராக செயல்பட்டு வருவது மது பிரியவர்களுக்கு பெரும் வசதியாக உள்ளது. இதனால் அம்மனை தரிசனம் செய்ய பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் குறிப்பாக பெண்கள் இந்த காட்சியை கண்டு வேதனைப்படுவது மட்டுமல்லாமல் பெரும் அச்சத்துடன் சென்று வரும் அவல நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.