அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது வி.கைகாட்டி கிராமம். இங்கு முத்துவாஞ்சேரி சாலையில் கிழக்கு புறத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக காய் கறி சந்தை ஒன்று செயல்படுகிறது. இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மட்டுமே இயங்குகிறது. இந்த சந்தைக்கு வி.கைக்காட்டி அருகே உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து பொதுமக்கள் அதிகளவில் காய்கறிகள் வாங்கி செல்கின்றனர். ஆனால் இந்த சந்தை நிலப்பகுதியில் செயல்படுவதால் மழைக் காலங்களில் சந்தை செயல்படும் பகுதியிலும், நுழைவாயில் பகுதியிலும் அதிகளவில் சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களை நிறுத்தி வைப்பதால் அப்பகுதி மிகவும் சேறும், சகதியுமாக மாற்றம் அடைந்துள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.