கரூர் மாவட்டம் ஜெகதாபியில் செயல்படும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி கரூர் மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1,300 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் பஸ், வேன் மூலமாகவும், அருகிலிருக்கும் ஊர்களை சேர்ந்த மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தும் விட்டு செல்கின்றனர். இதனால் காலையில் பள்ளி கூடும் நேரத்திலும், மாலையில் பள்ளி விடும் நேரத்திலும் நுழைவு வாயில் பகுதியில் உள்ள சாலையில் அதிகமான மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோரின் கூட்டம் இருக்கும். இந்தநிலையில் எந்நேரமும் சாலையில் அதிக வேகத்தில் செல்லும் லாரி, பஸ், வேன், கார், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை சாலையில் பஸ் ஏறவும் இறங்கவும் குறுக்கே செல்லும் மாணவ-மாணவிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்த கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பள்ளி பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.