புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், ஆவூர் ஊராட்சிக்குட்பட்ட ஆம்பூர்பட்டி, நால்ரோடு ஆகிய பகுதிகளில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. அப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகள் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் விளைவிக்கும் தக்காளி, கொய்யா, இளநீர், மா உள்ளிட்ட காய்களை பறித்து கீழே எறிந்து சேதப்படுத்தவதால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது. அதேபோல அப்பகுதியில் உள்ள வீடுகளிலும், கடைகளிலும் புகுந்து உள்ளே உள்ள பொருட்களை அள்ளி சேதப்படுத்தி விடுகிறது. மேலும் சிறு குழந்தைகளை கடிக்க வருவது போல அச்சுறுத்தி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் இதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிகளில் கொண்டு விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.