கரூர் மாவட்டம், நொய்யல் அருகே குறுக்கு சாலை வழியாக நொய்யல் ஆறு செல்கிறது. குறுக்குச்சாலை பகுதியில் மளிகை கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள், காய்கறி கடைகள், பேக்கரிகள் என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை நொய்யல் ஆற்றின் ஓரத்தில் கடைக்காரர்கள் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். அதேபோல் கோழிக்கடைகளில் சேகரிக்கப்படும் கோழிகளின் கழிவுகளையும், அழுகிய காய்களையும் இங்கே கொட்டி வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக கழிவுகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் இப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.