பாலம் கட்டப்படாததால் பொதுமக்கள் அவதி

Update: 2022-07-10 17:56 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முத்தனூரில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு புகழூர் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக முத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் விவசாயிகள் பாலத்தின் வழியாக இடு பொருட்களை கொண்டு சென்றும், விளைபொருட்களை அங்கிருந்து எடுத்து வந்தனர். கட்டப்பட்ட பாலம் 60 ஆண்டுகள் ஆனதால் பாலம் மிகவும் சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் இருந்தது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தனர். இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்த பாலத்தை உடைத்து போட்டனர். ஆனால் உடைத்த பாலத்திற்கு பதிலாக இதுவரை பாலம் கட்டப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு செல்ல முடியாமலும், விவசாயிகள் இந்த வழியாக இடுபொருட்களையும், விளைபொருட்களையும் எடுத்துச் செல்ல முடியாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இடிக்கப்பட்ட பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்