கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக கட்டிடம் சிதிலமடைந்து மழைநீர் வகுப்பறைக்குள் ஒழுகியதாலும், கட்டிடம் ஆபத்தான நிலையில் இருந்ததாலும் கட்டிடத்தை இடித்து புது கட்டிடம் கட்டித்தர மாணவிகளின் பெற்றோர்கள் பல முறை கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்த கட்டிடத்தை முழுவதும் இடித்துவிட்டனர். ஆனால் அந்த பள்ளி கட்டிடத்தின் அறையில் பயின்று வந்த மாணவ- மாணவிகளுக்கு படிப்பதற்கு உரிய கட்டிடம் இல்லாததால் ஆசிரியர்களின் முயற்சியால் மாணவ-மாணவிகள் தோட்டக்குறிச்சியில் உள்ள இரு சமுதாயக் கூடங்களை பள்ளி வகுப்பறையாக மாற்றி படித்து வருகின்றனர். இந்நிலையில் இடித்து சுமார் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை பள்ளி கட்டிடம் இடித்த நிலையிலேயே உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தானே புதிய கட்டிடத்தை கட்டி தருவதாக கூறியும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் சமுதாயக்கூடத்தில் இடம் பற்றாக்குறையாக இருப்பதால் அங்குள்ள மரத்தடியில் மாணவர்கள் பாடம் கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரு சமுதாயக் கூடத்தை தோட்டக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு விசேஷங்களுக்கு வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டி வந்தனர். இந்நிலையில் அந்த வருவாயும் இழப்பு ஏற்பட்டு விட்டது. எனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.