அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தும் காணப்படுகிறது. இந்நிலையில், அரியலூர் மெயின்ரோடு பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகள் சேதமடைந்து காணப்படுகிறது. குப்பைத்தொட்டிகளின் அடிப்பாகங்கள் முழுவதுமாக உடைந்து பொதுமக்கள் போடும் குப்பைகள் தரையில் விழுகின்றன. இதனால் அந்த குப்பைகள் முழுவதும் சாலைகளில் சிதறி கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.மேலும் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் வீசும் காரணத்தால் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் சூழலும் நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு குப்பை தொட்டிகளை சரிசெய்யவும், குப்பைகள் தேங்கா வண்ணம் இருக்கவும் ஆவண செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.