திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி குடமுருட்டி ஆற்றின் கரையில் மயான கொட்டகை பகுதியில் அதிக அளவு குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. மேலும் பேரூராட்சியில் பல்வேறு இடங்களில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து கொண்டுவரும் கழிவுகளை இந்த பகுதியில் தான் கொட்டி வருகின்றனர். இதனால் ஆற்று நீர் மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த இறைச்சி கழிவுகளை தின்பதற்காக நாய்கள், பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இவை சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். குப்பைகளால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.