புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காமராஜர்நகர் பகுதியிலிருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் டைமண்ட் நகர் உள்ளது. இங்கு சுமார் 50க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவ்வழியாகச் செல்பவர்கள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை சாலை ஓரத்திலேயே கொட்டி விடுகின்றனர். மேலும் டைமண்ட் நகர் அருகிலேயே கடைகள் அதிகமாக உள்ளது. இதனால் கடைகளில் உள்ள கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளையும் இங்கு வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். நீண்ட நாட்களாக இந்த குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றாததால் அந்த இடம் குப்பைமேடாக காட்சியளித்து வருகிறது. மேலும் இங்கு கழிவு நீர் செல்ல முறையாக வாய்க்கால் அமைக்காததால் மழை நீர் மற்றும் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் சாலையின் ஓரத்திலேயே தேங்கி விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு அவ்வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்வதோடு குப்பைகளை மிதித்துக்கொண்டு செல்லும் நிலைமைக்கு உள்ளாகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. அதுமட்டுமின்றி குப்பைகள் மற்றும் கழிவு நீர் தேங்கி இருக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே தனியார் மருத்துவமனையும் செயல்பட்டு வருவதால் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.