தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி 9-வது வார்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பஸ் நிலையம் பின்புறம் உள்ள வர்ண தீர்த்தம் பகுதியில் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி குப்பைக்கிடங்காக மாற்றி வருகின்றனர். ஆனால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக குப்பைக்கிடங்கு இருந்தாலும், அங்கு குப்பைகளை கொட்டாமல் குடியிருப்பு பகுதிக்குள் கொட்டி தீ வைப்பதால் இந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகள், முதியோர் உள்பட பொதுமக்கள் சுவாச பிரச்சினையால் நோய் ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர்.இங்கு குப்பை கொட்ட வேண்டாம் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே வர்ணதீர்த்தம் பகுதியில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.