தெரு விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2023-03-01 12:05 GMT

கரூரில் இருந்து வெள்ளியணை செல்லும் சாலையில் தாளியாபட்டி பிரிவு பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி அருகே சாலையில் அடியில் சுமார் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு தனியார் சிமெண்டு நிறுவனத்திற்கு கற்களை ஏற்றி செல்லும் ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கரூர் வெள்ளியணை சாலையில் அந்த இடத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கரூர் வெள்ளியணை வரை சாலை அகலப்படுத்தப்பட்டபோது சாலையில் குறுக்கிட்ட பாலங்கள் அனைத்தும் அகலப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த பாலம் மட்டும் அகலப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் அகலமான சாலையில் விரைந்து வரும் இருசக்கர வாகனங்கள் பாலப்பகுதி வந்த உடன் தடுமாறி குறுகலான பாலத்தின் வழியே செல்ல வேண்டியுள்ளது. கவனித்து பாலத்தை கடந்து செல்லாதபோது சுமார் 10 அடி ஆழமுள்ள ரெயில் பாதை பள்ளத்தில் விழுந்து இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழக்கின்றனர். இதை தடுக்க பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தபோதும் அது நிறைவேறாத சூழ்நிலையில், பாலத்தின் இருபுறமும் மின்விளக்கு வசதி அமைத்தால் பாலம் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு நன்கு தெரிவதுடன்,விபத்து ஏற்படும் வாய்ப்பு இல்லாமல் போகும். எனவே வெள்ளியணை மற்றும் மணவாடி ஊராட்சி நிர்வாகங்கள் பாலத்தின் இருபுறமும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்