கரூர் மாவட்டம், தாந்தோன்றி ஒன்றியம் ஜெகதாபி ஊராட்சி அய்யம்பாளையம் புலியூர்- மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு அமைந்துள்ள பயணியர் நிழல் குடை பகுதியில் அனைத்து பஸ்களும் நின்று செல்கின்றன. இங்கிருந்து பலரும் தினந்தோறும் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் இங்குள்ள காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூலி வேலை செய்ய கரூர் சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புகின்றனர். இந்த நிலையில் இங்குள்ள பஸ் நிறுத்த பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாததால் பஸ்சில் இருந்து இறங்கி செல்லும் பயணிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே ஊராட்சி பஸ் நிறுத்த பகுதி பயணிகள் நிழல் குடை அருகே மின்விளக்கு வசதி செய்து தருவதுடன் அங்குள்ள காலனி பகுதி வரை செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சாலை ஓரத்திலும் மின்விளக்கு வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.