கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மலைக்கோவிலூர் அருகே காந்திநகர், பாரதி நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலைக்கோவிலூர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மலைக்கோவிலூர் அருகிலேயே உள்ள மேற்கண்ட பகுதிகளுக்கு காவிரி குடிநீர் திட்டம் வழங்கவில்லை. தற்போது நாகம்பள்ளி அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேகரித்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை. இப்பகுதி பொதுமக்கள் பல நேரங்களில் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகிறார்கள். எனவே இப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.