அரியலூர் மாவட்டம், கா. அம்பாபூர் கிராமத்தில் பிடாரி ஏரி ஒன்று உள்ளது. எந்த ஏரியில் உள்ள தண்ணீர் ஊர் பொதுமக்கள் குளிப்பதற்காகவும், கால்நடைகள் தண்ணீர் குடித்தும் பயன்படுத்தி வந்தனர். மேலும் ஊரில் ஏதாவது முக்கிய விஷேச நாட்களில் இந்த ஏரியில் இருந்து தான் பொதுமக்கள் தண்ணீரை எடுத்து சென்று வந்தனர். இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் தற்போது ஏரியில் கலக்கிறது. இதனால் ஏரி தண்ணீர் மாசு அடைந்துள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஏரியில் குளிக்கும்போது அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் ஏரியில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.